ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பதில் அஜித் மானப்பெரும

ajith manaperuma
ajith manaperuma

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நாடாளுமன்றத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவருமான அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க,  நீதிமன்ற அவமதிப்பு தண்டனை காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடுவதால்,  அஜித்  பதிலீடு செய்யப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

அஜித் மானப்பெருமவை பதிலீடு செய்ய தமது கட்சி எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும், 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம்  தானியக்க முறையில்,  அது குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் எனவும்  ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

 கடந்த 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெரும 47,212 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

இந் நிலையில் குறித்த கட்சியின்  பட்டியலில் அவரே அடுத்த இடத்தில் உள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட ஒரு வேட்பாளர் பதவியை இழக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த சில நாட்களில்  பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவரை பெயரிட்டு வர்த்தமானி வெளியிடுவது வழமையாகும்.