வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138ஆக உயர்வு!

iStock 1203949841 e1583911785619
iStock 1203949841 e1583911785619

வவுனியா நகர கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் மேலும் 12 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிகள் முடக்கப்பட்டு தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் முல்லேரியா மற்றும் அநுராதபுரம் ஆய்வுகூடங்களில் இன்று 666 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 12 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.