வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும் ஆரம்பம்!

vavuniya ag
vavuniya ag

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகளை 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.


வவுனியாவின் முடக்க நிலமை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினையடுத்து கடந்த 12.01.2021 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்டத்தின் சில பகுதிகளை 24ம் திகதி வரை தனிமைப்படுத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி , கண்டி வீதி இரானுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் உள்ளடக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.


இந் நிலையில் வவுனியா பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி , சந்தை சுற்றுவட்ட வீதி போன்றவற்றினை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 18.01.2021 திங்கட்கிழமை வழமைக்கு திரும்புவதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பொதுமக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.