நாடாளுமன்றத்தில் 17 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1
SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1

நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர்நாடாளுமன்றத்தில் 17 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சபாநாயகர் காரியாலயம் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடும் நாடாளுமன்றத்தில் அன்றைய தினமே ஒத்திவைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்க சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கடந்த வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தற்போது வரையில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை பேணியவர்கள் சகலரும் தனிமைப்படுத்தப்படவும் சுகாதார அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.