யாழில் புகையிரதத்தை கவிழ்க்க முயற்சி!

jaffna railway station
jaffna railway station

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் புகையிரதத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதற்கும் மேற்பட்ட இரும்பு கிளிப்புகளை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக புகையிரத திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினர்.

அதனையடுத்து விரைந்து செயற்பட்ட புகையிரத திணைக்கள அதிகாரிகள், கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகள் பொருத்த நடவடிக்கை எடுத்து புகையிரத பாதை சீர் செய்யப்பட்டது. அதனால் நடைபெறவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது.

தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தபட்டிருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டமையால் புகையிரதம் வரும் போது அவ்விடத்தில் புகையிரதம் தடம் புரளும் வாய்ப்புக்கள் அதிகம்.

அதேவேளை அப்பகுதி குடிமனைகள் அதிகமாக உள்ள பகுதியும் ஆகும். அவ்விடத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாம்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கமுவ பகுதியில் யாழ்.தேவி புகையிரதம் தடம் புரண்டது. அதனால் சுமார் இரண்டு நாட்கள் வடக்குக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டு இருந்தது. இந்நிலையிலையே யாழில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.