எதிர்க்கட்சி இனி அமைதியாக இருக்காது-சஜித்

Sajith 1
Sajith 1

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதுவித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாது ஒதுங்கியிருந்த சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் தொடர்பில் இனி அமைதியாக இருக்க முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சுவிஸ் தூதரக அதிகாரியொருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை, பொலிஸ் அதிகாரிகள் மீது அரசியல் பழிவாங்கல் மற்றும் ஊடகவியலாளர்களை மிரட்டும் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்கள் தேர்தலின் போது ராஜபக்ஷ அளித்த உறுதி மொழிகளுக்கு முரணானது என்று சுட்டிக்காட்டிய அவர், பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மேலும் சுவிஸ் தூதரக பணியாளரை கடத்தியது இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என்றும் சஜித் சுட்டிக்காட்டிய அவர் ஊடகவியலாளர்களை தேவையற்ற அழுத்தத்திற்கு உட்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே அதன் ஆணையை நிறைவேற்ற நேரம் தேவைப்படுவதால் அதை விமர்சிப்பது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்ற போதும், சில சம்பவங்கள் நடைபெறுவதால் எதிர்க்கட்சி இனி அமைதியாக இருக்க முடியாது என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.