இலங்கையில் கொள்கைகள், நிலைப்பாடுகளுக்கு பொதுநலவாய நாடுகள் ஆதரவு வழங்கும்- தினேஷ் குணவர்தன

Tariq Ahmed
Tariq Ahmed

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளுக்கு பொதுநலவாய நாடுகள் ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் தெற்காசிய மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை தொலைபேசிவழிக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் தலைமையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட ஆணைக்குழு தொடர்பில் தாரிக் அஹமட்டிடம் எடுத்துரைத்ததாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதனால் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட குழுக்கள் மற்றும் நீதி ஆகியவற்றின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எடுத்துக்கூறியதாக நேற்று  அமைச்சர் தாரிக் அஹமட் டுவிட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.