இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா!

110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98 3
110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98 3

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கடந்த 10 நாட்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின் கீழ் தனிமைப்படுதப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது.

அதனால் அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளார். ஏனையோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளில் மேலும் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் அங்கொடயிலிருந்து வருகை தந்து இரணைமடு வீதி சீரமைப்புப் பணிக்குழாமின் சாரதியாகக் கடமையாற்றுபவர். மற்றையவர் வவுனியா காவல்துறை நிலைய காவல்துறை உத்தியோகத்தர். அவர் காய்ச்சல் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற போது மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் பி சி ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.