ஓட்டமாவடியில் இறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கும் நிகழ்வு

01 5 2
01 5 2

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இறால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வந்த காணிப் பிரச்சனைக்கான தீர்வு இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இறால் பண்ணையாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கான கலந்துரையாடல் ஓட்டமாவடி செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.என்.முகுந்தன், கரையோர நீர்வாழ் உயிரின விஸ்தரிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச் சூழல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன், செயலக உத்தியோகத்தர்கள், இறால் பண்ணையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இருபது இறால் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை திறம்பட மேற்கொள்வதற்கு தகுந்த காணிகள் இன்மையால் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் இவர்களின் தொழிலினை விருத்தி செய்யும் நோக்கில் நிபந்தனைகளுடன் குத்தகை அடிப்படையில் இவர்களுக்கு காணி வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு காணிக்கான ஒரு வருட குத்தகை பணத்தினை மார்ச் மாதம் முடிவடைவதற்குள் செலுத்த வேண்டும் என்றும், மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச் சூழல் அதிகாரசபையின் நிபந்தனைகளுக்கேற்ப இறால் உற்பத்தி தொழிலை நடாத்த வேண்டும் என்றும் பணிப்புரை வழங்கப்பட்டது.