கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பம்-லலித் வீரதுங்க

lalith weerathunga
lalith weerathunga

இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா கொவிசீல்ட் தடுப்பூசிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா கொவிசீல்ட் தடுப்பூசிகளை சுமந்த ஏ.ஐ-281 ரக விமானம் இன்று முற்பகல் 11.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், அந்தத் தடுப்பூசிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பூனேயில் உள்ள சீரம் நிறுவனத்தினால், இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளமையினால், 2 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

இதற்கான முதன்மைக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி சுகாதாரத் தரப்பினருக்கும், முப்படை மற்றும் காவற்துறையினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், மூன்றாவது குழுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாட்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.

எவ்வாறாயினும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார்.

தன்னார்வ அடிப்படையிலேயே இந்த தடுப்புசிகள் செலுத்தப்படவுள்ளன.

இதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றவர்களிடம் இருந்து ஒப்புதல் படிவம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.