பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

Gotabaya Rajapaksa
Gotabaya Rajapaksa

நாளை நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதியின் கட்டளைக்கமைய இரண்டு வாரங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி புதிதாக தெரிவாகிய நிலையில் முதலாவது பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுவது பாரம்பரியமாக உள்ளது. அதனடிப்படையில் நாளைய அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்விற்கான திகதி ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கட்டளைக்கமைய பாராளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படுகின்றமையினால் பாராளுமன்றின் கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் கலைக்கப்படுவதுடன் ஆயிரக் கணக்கான பிரேரணைகள் மற்றும் பொது மக்களின் மனுக்கள் என்பன நிகழ்ச்சி நிரலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில், எந்த பிரேரணைகளையும் முன்வைக்கவோ, கேள்விகளை முன்வைக்கவோ முடியாது. கிட்டத்தட்ட பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.