கடந்த மூன்று நாட்களில் வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

114379358 e6d33e74 1deb 4f40 9686 d38004a4c2d1
114379358 e6d33e74 1deb 4f40 9686 d38004a4c2d1

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய மூன்றாம் நாளில் 2 ஆயிரத்து 694 பேர் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களில் வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 221 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது மொத்த உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையில் 73 சதவீதமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.

இந்தப் பணியில் முதல் நாளான நேற்றுமுன்தினம் 2 ஆயிரத்து 997 பேர் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.

இரண்டாம் நாளான நேற்று வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 530 சுகாதார சேவையாளர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

மூன்றாம் நாளான இன்று வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 694 பேர் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 388 பேரும் கிளிநொச்சியில் 370 பேரும் மன்னாரில் 332 பேரும் வவுனியாவில் 350 பேரும் முல்லைத்தீவில் 284 பேரும் இன்று கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.

இதுவரை 73 சதவீத சேவையாளர்கள் மட்டுமே தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பவதிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க காத்திருப்போர் என மூன்று வகையினரை இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதனால் அவ்வாறானவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள நாளை மேலும் ஒருநாள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது – என்றார்.