பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்றும் தொடர்கிறது

IMG 20210203 115311
IMG 20210203 115311

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று மட்டக்களப்பு தாழங்குடாவில் ஆரம்பமாகி முல்லைத்தீவை நோக்கி செல்லவுள்ளது.

நேற்று முற்பகல் 9 மணியளவில் மழைக்கு மத்தியில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறைகள் ஊடாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற தடை உத்தரவுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குயேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.