விஷேட அமைச்சரவை கூட்டத்தின் பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – உதய கம்மன்பில

uthaya kampanpila
uthaya kampanpila

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை விஷேட அமைச்சரவை கூட்டத்தின்  பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில, தற்போது பிரதி எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.

இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கோரியுள்ளனர்.

இதன் பிரதிகளை அவர்களுக்கு வழங்குவதில் ஏன் கால தாமதம் ஏற்படுகிறது ? என்று கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

குறித்த அறிக்கையை அவர்களிடம் கையளிப்பதற்கு கால தாமதம் ஏற்படும். ஏதேனுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாயின் அது முதலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்திலும், இறுதியாக ஏனையோருக்கும் வழங்கப்படும்.

தற்போது அமைச்சரவையில் 27 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கான பிரதிகளை எடுக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பான விஷேட அமைச்சரவை கூட்டம் எப்போது நடைபெறும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பிய போது , பிரதிகள் தயாரான பின்னர் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று ஜனாதிபதி பதிலளித்தார்.