மட்டக்களப்பில் கணினி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கி திறந்து வைப்பு

19
19

மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட சமுர்த்தி கணினி மயப்படுத்தல் நிலையத்தின் மூலம் தரமாக முன்னேறி வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தன்னியக்க வங்கி மற்றும் வங்கி சங்க கட்டட திறப்பு விழா சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட சமுர்த்தி கணினி மயப்படுத்தல் நிலையத்தின் மூலம் தரமாக முன்னேறி வருகின்றது. இலங்கையிலே கிட்டத்தட்ட 135 கணினி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிகள் உள்ளன. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்தாவது கணினி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கியை திறந்து வைத்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமையின் கீழ் உள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இதில் உண்மைத் தன்மை இருக்கலாம். இருந்தாலும் சுட்டிக்காட்டும் அளவிற்கு எமது மக்களின் வாழ்க்கைத் தரம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

வறுமையிலுள்ள மக்களுக்கு சேவை செய்யும் சமுர்த்தி வங்கிகளை ஒரு இறுக்கமான, நேரிய கட்டமைப்புடன் சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் சமுர்த்தி பணிப்பாளருடன் கலந்தாலோசித்த பொழுது உத்தியோகத்தர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுவதாக கூறினார்.

ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. எமது மாவட்ட இளைஞர்கள், உத்தியோகத்தர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள், திறமை குறைந்தர்வர்கள் அல்ல. அவர்களின் தெளிவான பார்வை, அவர்களது திறமையை வெளிக்காட்டக் கூடிய வகையில் சந்தர்ப்பம் வழங்கினால் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில் சமுர்த்தி வங்கிகளை தன்னியக்க வங்கி மூலமாக மாற்ற வேண்டும், அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

தற்போது பார்க்கும் போது மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட சமுர்த்தி கணிணி மயப்படுத்தல் நிலையத்தின் மூலம் தரமாக முன்னேறி வருகின்றது. இலங்கையிலே கிட்டத்தட்ட 135 கணினி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிகள் உள்ளன. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்தாவது கணினி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கியை திறந்து வைத்துள்ளோம்.

இதனை ஒப்பிடும் போது குறித்த துறையில் நாம் விரைவாக முன்னேறி வருகின்றோம். இந்த இடத்தில் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை பாராட்டுகின்றேன் என்றார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எம்.எஸ்.எம்.பஸீர், மாவட்ட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.வீ.ரமீஸா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சமுர்த்தி சங்க தலைவர்கள் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது