மாவட்ட நிர்வாகத்தில் அரசியல் தலையீடு செய்யும் அங்கயன்

download 11 1
download 11 1

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், துறைசார் அமைச்சரைக் கோரியுள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தில் ஏற்கனவே அரசியல் தலையீடு உள்ளது என்றும், திடீர் இடமாற்றங்களின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது என்றும் தொடர் குற்றச்சாட்டுக்கள் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அலுவலரை கொழும்பு மாவட்டத்துக்கு இடமாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனைக் கோரியுள்ளார்.

அங்கஜனது கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று அவரது அமைச்சின் செயலர் ஜே.ரத்னசிறிக்கு, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பணித்துள்ளார். இந்தக் கடிதம் கடந்த 2ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலர், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றியிருந்தார்.

அப்போது சுன்னாகத்தில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், தேர்தல் முறைகேடு இடம்பெறுகின்றது என்று கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரிக்கச் சென்றபோது அங்கிருத்தவர்களால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.

அதேவேளை, இந்த அலுவலர் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரம் மன்னாருக்கு இடமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.