பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் நேரடியாக எம்முடன் கலந்துரையாட வேண்டும்-சம்பிக்க ரணவக்க

download 3 8
download 3 8

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சிறந்த முதுகெலும்புள்ள தலைவர்கள் என்றால் இவ்வாறு மாற்று முயற்சிகள் மூலம் எம்மீது அடக்குமுறையை மேற்கொள்ளாமல் , நேரடியாக கலந்துரையாடி தீர்வுக்காண முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியின் கையில் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயம் தொடர்பில் எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுக்கு மூன்று மாதகாலவகாசத்தையும் வழங்கியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால்களை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகளை அடக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறை செயற்பாடுகள், அதனால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் .

அதேவேளை ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சிறந்த முதுகெலும்புள்ள தலைவர்கள் என்றால் இவ்வாறு மாற்று முயற்சிகள் மூலம் எம்மீது அடக்குமுறையை மேற்கொள்ளாமல் , நேரடியாக கலந்துரையாடி தீர்வுக்காண முயற்சிக்க வேண்டும்.

சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.