தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவரிடம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் விசாரணை!

IMG 20210221 WA0011
IMG 20210221 WA0011

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு காவல் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு, வாக்குமூலமும் பெறப்பட்டார்.

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பிலேயே இவ்விசாரணை இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் என்னிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு காவல் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் நான் கவல் நிலையம் சென்றிருந்தேன். சுமார் ஒன்றரை மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டு என்னிடம் அப்பேரணி தொடர்பில் வாக்குமூலமும் பெறப்பட்டது.

நான் அவர்களுக்கு எங்கள் தரப்பு விடயங்களை மிகத் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றேன்.

இது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விடயங்களில் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு அமைதியான பேரணியாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நடைபெற்றது.

எனவே எவ்வித ஜனநாயக விரோதமுமற்ற முறையில் சிவில் சமூகங்களின் ஒழுங்கமைப்பில் மக்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணிக்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பூரண ஆதரவை வழங்கியது. அதன் பேரிலேயே எங்கள் பங்களிப்பும், எங்கள் ஆதரவாளர்களின் பங்களிப்பும் இப்பேரணியில் இருந்தது என்ற விடயத்தை மிகத் தெளிவாகப் காவல்துறையினரிடம் கூறியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.