இந்தியாவின் சீரம் நிறுவனம் 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்கவுள்ளது

113254181 66f336fc 03ba 4484 981f efc86fa1e8b6 1
113254181 66f336fc 03ba 4484 981f efc86fa1e8b6 1

இந்தியாவின் சீரம் நிறுவனத்திற்கும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் 10 மில்லியன் தடுப்பூசிகளுக்கான கொள்வனவு ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த கொள்வனவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

குறித்த தடுப்பூசிகள் எதிர்வரும் வியாழக்கிழமை இரவு நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளின் மூலம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி விடயத்தில் உள்நாட்டு தேவைகளுக்கே முதலிடம் வழங்கப்படும் என இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதற்கமைய, கொரோனா தடுப்பூசி விடயத்தில் உள்நாட்டு தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு தமது நிறுவனத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, சீரம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்காக காத்திருக்கும் சர்வதேச நாடுகள் பொறுமை காக்க வேண்டும் எனவும், சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சீரம் நிறுவனத்தின் இலங்கைக்கான தடுப்பூசி விநியோகத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் 20 வீதமான சனத்தொகைக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளது.

இதற்கமைய, குறித்த Covax திட்டத்தின் கீழ் இலங்கைக்கு முதல் கட்டமாக 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக இலங்கைக்கு 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.