நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமையை சபைப்படுத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ

images 14
images 14

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வி தகைமையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும், சபாநாயகர் சகலரதும் கல்வித்தகைமையை சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். அவரது கல்வி தகைமையை இன்றைய தினம் சபையில் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை சபைப்படுத்தப்படுவதன் தாமதம் குறித்து ஆளும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹரின் பெர்னாண்டோ எம்.பி, ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழு நம்பிக்கையில்லாத ஒன்றாகவும், சாதாரண தரத்தில் சித்தியடையாத நபர்கள் இந்த குழுவில் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நாடாளுமன்றத்தில் உள்ள சகலரதும் கல்வி தகைமை என்ன என்பதை சபாநாயகர் இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும். எனது கல்வித் தகைமை என்ன என்பதை நாளைய தினம் ( இன்று) சபையில் தெரிவிக்கின்றேன்.

அதேபோல் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கல்வித் தகைமை என்ன என்பதை சபைக்கு தெரிவியுங்கள். அப்போது இந்த சபையில் சாதாரணதர தகுதி இல்லாதவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றார்.