பொதுபல சேனாவை தடைசெய்ய முடியாது-ஞானசார தேரர்

gnanasara thero
gnanasara thero

பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாதிகள் என கூறுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் ஆக்ரோசமாக பேசவும், கோவப்படவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளே காரணம். அதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்தில் முக்கியஸ்தர் ஒருவரே மாற்றியுள்ளார். அந்த உண்மைகளை விரைவில் வெளிப்படுத்துவோம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய முடியாது. இப்போது நாம் இருக்கும் நிலையை விடவும் பலமாக அடுத்த அடி எடுத்து வைப்போம் எனவும் அவர் கூறினார்.

பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாத அமைப்பெனவும், அதனை தடைசெய்ய வேண்டும் எனவும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அது குறித்தும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் போதே இவற்றைக்கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட நாம் காரணம் அல்ல, இஸ்லாமிய அமைப்புகளுடன் நாம் இணைந்து செயற்படவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்யாது எம்மை தடைசெய்யக்கோருவது நியாயமானதல்ல. இந்த அறிக்கையில் எமது அமைப்பு தொடர்பில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கேள்வி :- பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பையும் தடைசெய்ய வேண்டும் என ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே ?

பதில் ;- நாம் அடிப்படைவாதிகள் அல்ல, நாம் கௌதம புத்தரின் கொள்கைக்கு அமைய செயற்பட்டு வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் எம்மை அடிப்படைவாதிகள் என கூற முடியாது.

கேள்வி :- உங்களை உலகின் மோசமான பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதே?

பதில் :- நாம் பயங்கரவாதிகளும் அல்ல, எமது மக்கள் இலக்குவைக்கப்பட்டு வருகின்றனர். எமது மக்களை நாம் காப்பாற்ற பேசுகிறோம், அதற்காக கோவப்படுகின்றோம். அதனை அடிப்படைவாதிகளென கூறி அடிப்படைவாதிகளுடன் எம்மையும் ஒப்பிட்டு கூறுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டிற்குள் இடம்பெற்ற ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், மதமாற்ற நடவடிக்கைகளை தடுக்கவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தடுக்கும் விதமாக போராடினோம். அவ்வாறு போராடிய எம்மையே இறுதியாக அடிப்படைவாதிகளாக அடையாளப்படுத்தி விட்டனர். ஐ .எஸ் அமைப்பும், ஜமா-அத்தே இஸ்லாம் அமைப்பும் பொதுபல சேனா அமைப்பும் ஒன்றா? எம்மை ஏன் இலக்குவைக்கின்றனர் என்பது எமக்கும் நன்றாக தெரியும். எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை பறித்தமையும் எம்மை இலக்கு வைத்தே என்பதை நாம் நன்றாக அறிவோம்.

கேள்வி :- ஆணைக்குழு அறிக்கையை நீங்கள் ஏற்றுகொள்ள மாட்டீர்களா?

பதில் :- இல்லை, எம்மை இலக்குவைத்து கூறப்படும் காரணிகளை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.

கேள்வி :- உங்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த அநியாயமும் நடக்கவில்லை என்று உங்களால் கூற முடியுமா ?

பதில் :- உறுதியாக கூற முடியும், நாம் கடும்போக்காக சில இடங்களில் செயற்பட்டமை உண்மையே. ஆனால் எம்மை அவ்வாறு செயற்பட வைத்தது முஸ்லிம்களே. முதலில் தாக்குதல் நடத்தியவர்களும், சிங்கள சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தவர்களும் முஸ்லிம்களே. அவர்களிடம் இருந்து எமது சமூகத்தை பாதுகாக்கவே நாம் நடவடிக்கை எடுத்தோம். அதை தவறாக கூறுவதில் நியாயம் உள்ளதா.

கேள்வி :- குற்றவாளிகளை காப்பாற்றவும், உண்மைகளை மறைக்கவும் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக நினைக்கின்றீர்களா ?

பதில் :- நிச்சயமாக இந்த அறிக்கையில் அரசியல் தலையீடுகள் உள்ளது. ஒரு சிலர் அரசாங்கத்தை தவறாக வழிநடத்தி வருகின்றனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அவர்களின் ஒருசிலரே சூழ்ச்சி செய்கின்றனர். குறிப்பாக ஒரு நபர் தலையீட்டில் இந்த அறிக்கை மாற்றப்பட்டுள்ளது. எமது அரசியல் பயணத்தை தடுத்ததும் இந்த நபரே. வெகு விரைவில் உண்மைகளை வெளிப்படுத்துவோம்.

கேள்வி :- யார் அந்த நபர் ?

பதில் :- அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தாம் ஆட்சிக்கு வரலாம் என நினைக்கும் அரசாங்கத்தில் உள்ள சிலரே இந்த சூழ்சிகளை செய்து வருகின்றனர். விரைவில் அவர் குறித்தும் அவருடன் உள்ள நபர்கள் குறித்தும் உண்மைகளை வெளிப்படுத்துவோம்.

கேள்வி :- பொதுபல சேனா அமைப்பை தடைசெய்தால் அடுத்ததாக என்ன செய்வீர்கள் ?

பதில் :- பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய முடியாது, அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். இப்போது நாம் இருக்கும் நிலையை விடவும் பலமாக அடுத்த அடி எடுத்து வைப்போம். அதேபோல் நாட்டில் ஒட்டுமொத்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் அழித்து முடிப்போம். அதேபோல் இந்த நாட்டில் அடிப்படைவாதத்தை ஒழிக்கும் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி மீது எமக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது.