ஈஸ்டர் தாக்குதல்! முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு-விமலசார தேரர்

download 5 3
download 5 3

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பார்கள் என்று தேசிய புத்தி ஜீவிகள் சங்க சபையின் உறுப்பினர் ஹடிகல்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

இனவாத, மதவாத செயற்பாடுகள் இருதரப்பிலும் ஏற்படுவதற்கு, சில அமைப்புக்களை விட அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் தேவைக்கமையவே இடம்பெற்றது. இவை எவற்றையும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரிக்கவில்லை.

இதுதொடர்பில் உரிய முறையில் விசாரணைகளைச் செய்திருந்தால், தற்போது அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பர். அவ்விருவருமே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறியிருக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை முழுமையாக மீறி, நிசங்க சேனாதிபதி என்பவர் அவன்கார்ட் என்ற சட்டவிரோத துப்பாக்கி நிறுவனத்தை வைத்திருந்தார். இதன்மூலம் நிசங்க சேனாதிபதி தனிநபர், அமைப்புகளுக்கு துப்பாக்கிப் பயிற்சியை வழங்கியுள்ளார்.

எனினும் அவர் யாருக்கு, எந்த அமைப்புக்கு துப்பாக்கி பயிற்சியை வழங்கினார் என இதுவரை எவ்வித தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை. இது முற்றிலும் சட்டவிரோத செயற்பாடு.

அவ்வாறு ஆயுதப்பயிற்சி வழங்கப்படுமாயின் அது இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு அல்லது அரசாங்கத்தால் மாத்திரமே வழங்கப்பட வேண்டும். தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவுக்குப் பொறுப்பொன்று இருந்தது. நிசங்க சேனாதிபதி யாருக்குப் பயிற்சி வழங்கினார்? இதற்கான நிதி எங்கிருந்து கிடைத்ததென்று ஆணைக்குழு விசாரிக்கவில்லை என்றார்.