அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொண்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்-சம்பிக்க

champikka
champikka

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கையாள அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் இணைந்து பொதுவான வேலைத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். இதற்கான அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் கலந்துரையாட வேண்டும். இப்போது அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால் இந்த பிரேரணையின் பின்னர் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இலங்கை அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும், தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் புதிய ஒரு பிரேரணையை இலங்கைக்கு எதிராக முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் எம்மால் வெற்றிகொள்ள முடியுமா என தெரியவில்லை ஆனால் இந்த பிரேரணையின் பின்னர் இலங்கைக்கு பாரதூரமான விளைவுகள் ஏற்படப்போகின்றது என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. இப்பொது கொண்டுவரவுள்ள பிரேரணையும் இலங்கை இராணுவம் யுத்த குற்றங்களை செய்தனர் என்பதை அடிப்படியாக கொண்டே  முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னரும் இதே குற்றச்சாட்டுடன் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் நாம் தோற்றோம். அதனை தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொருளாதார ரீதியில் நெருக்கப்பட்டோம்.

எனினும் 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் அப்போது கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக தடை விதிக்கப்பட்டிருந்த சில காரணிகளில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக்கொண்டு ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவையும் நட்பாக்கிக்கொண்டோம். ஆனால் மீண்டும் இந்த அரசாங்கம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுப்பதாக கூறி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டுக்கு எதிரான மோசமான பொருளாதார தடைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது  என்றார்.