நீர்ப்பாசன செழுமை துரித தேசிய நிகழ்ச்சித் திட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் ஆரம்பித்து வைப்பு!

FB IMG 1615130680870
FB IMG 1615130680870

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் நீர்ப்பாசன செழுமை துரித தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குளங்கள், அணைக்கட்டுக்கள் மற்றும் விவசாய நீர்ப்பாசன தொகுதிகளை மறுசீரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் இன்று(07) காலை 11.00மணிக்கு கோனாயன் குளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தின் புனரமைப்பு அங்குராப்பண வேலைகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்திற்காக சுமார் 8.7 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 58 குளங்களை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் , மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விவசாய திணைக்கள உதவி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதேச சபை உப தவிசாளர், நீர்ப்பாசன பொறியிலாளர்கள், கமக்கார அமைப்புக்களின பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.