மனிதாபிமானம் சாகவில்லை; பல வருடங்களாக யாசகம் பெற்றுவந்த வயோதிபர் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு!

IMG 251e957380b4a9a2b3707f25c898e74c V
IMG 251e957380b4a9a2b3707f25c898e74c V

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் வீதியோரங்களில் யாசகம் கேட்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந் நிலையில் முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் யாசகம் கேட்கும் வயோதிபர் ஒருவரை பல சிரமங்களுக்கு மத்தியிலும் முதியோர் இல்லத்தில் சேர்த்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு செம்மலை கிராமத்தில் பல வருடங்களாக உறவினர்கள் அற்ற நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டு யாசகம் பெற்று வந்த நிலையில் தற்போதைய அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு அருணாச்சலம் பெருமாள் (வயது 78) என்ற முதியவரே இன்று (08) மாலை வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் பல துன்பங்களை எதிர் கொள்வதனை அவதானித்தவர்கள் தற்போதைய அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு குமுழமுனை மேற்கு கிராம அலுவலகர் திருமதி அனுஜா, கரைதுறைப்பற்று குழுழமுனை பிரதேச சபை உறுப்பினர் இ . கவாஸ்கர் ஆகியோர் இணைந்து குறித்த வயோதிபரின் விருப்பத்திற்கிணங்கவும் பிரதேச செயலாளர், பிரதேச சமூகசேவை திணைக்களத்தின் அனுமதியுடனும், குறித்த வயோதிபரின் நிலை தொடர்பான முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் மருத்துவ சான்றுதளுடனும் சிவன் முதியோர் இல்லத்தின் தலைவர் உமா மாதவன் , செயலாளர் நவரட்ணராஜா மற்றும் சமூக ஆர்வலர்களான விக்னா, சந்திரகுமார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வவுனியா ஊடகவியலாளர் பாலநாதன் சதீஸ் என்பவரால் குறித்த வயோதிபர் இன்று வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த வருடமும் குறித்த நபர்களால் முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் அநாதரவற்று யாசகம் பெற்றுவந்த முதியவர் ஒருவரை சிவன் முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.