காரைநகர் வைத்தியசாலை தொடர்பில் மக்கள் விசனம்

karainagar
karainagar

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் எவரும் அக்கறை செலுத்தாமையால் தாங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதும் அவர் இதுவரை தனது கடமைகளை பொறுப்பேற்காது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலேயே கடமையாற்றுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் பௌதீக வளங்கள் சிறப்பாக காணப்படுகின்ற போதும் நோயாளர்களுக்கான சிகிச்சை முறையாக வழங்கப்படுவதில்லை எனவும், குறிப்பாக சிகிச்சைக்காக வருகின்ற கர்ப்பவதிகள் திருப்பியனுப்பப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தகமைவாய்ந்த வைத்திய அதிகாரி இல்லாமையே இவ்வாறான நிலைக்குக் காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். சுகாதாரத் திணைக்களம் குறித்த விடயத்தில் ஏன் பாரபட்சம் காட்டுகின்றது எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இந்த விடயத்தில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.