புர்கா’வைத் தடை செய்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – அரசு அறிவிப்பு

kekaliya
kekaliya

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அதனைத் தடை செய்வது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளார் எனவும், இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் அது சம்பிக்கப்படும் எனவும் கடந்த வாரம் நிகழ்வொன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறான அமைச்சரவைப் பத்திரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, அந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்று கூறினார்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதால் புர்காவுடன் நிகாப்பையும் தடை செய்ய யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அது தொடர்பாக ஆராய்ந்தே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.