ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தோற்கடிப்போம் என்கிறார் சம்பிக்க

download 6 7
download 6 7

ஆளும் கட்சி எமக்காகத் தயாரிக்கின்ற தூக்குக்கயிற்றை மிகவும் வலுவாகத் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் எதிர்வரும் காலத்தில் அந்தக் கயிறுக்கு அவர்களே பலியாகப்போகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கொழும்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தோற்கடித்து மக்களுக்கான ஆட்சியை ஸ்தாபித்து, அவர்களால் வீழ்ச்சிகண்ட பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதே எமது இலக்காகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று அனைவரும் நினைக்கின்றார்கள். ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காணப்படவில்லை. ஆனால் அப்போதும் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலேயே இருந்தது.

எமது ஆட்சியின் போது வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். எனினும் தற்போதைய அரசாங்கம் கடன்களை மீளச்செலுத்துவதற்குக்கூட கடன்பெறமுடியாத நிலையிலுள்ளது. அதுமாத்திரமன்றி இப்போது கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் வியாபாரமாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்குப் போதுமானளவு நிதி சீனி இறக்குமதியின் ஊடாக மோசடி செய்யப்பட்டிருக்கிறது. அந்த சீனி இறக்குமதி மோசடியுடன் தொடர்புபட்டவர்களே ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சிபீடத்தில் ஏற்றுவதற்கு அவசியமான உதவிகளை வழங்கினார்கள்.

அதேபோன்று இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஜனாதிபதியே அவற்றுக்கு அனுமதி வழங்குகின்றார். கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவின் பிள்ளைகள் லொஸ் ஏஞ்சல்ஸில் வாழ்கிறார்கள். ஆனால் எமது பிள்ளைகள் இந்த நாட்டிலேயே வாழவேண்டும். அவர்கள் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்று வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நியாயமான விடயங்கள் தொடர்பில் பேசுகின்ற எம்மை சிறையில் அடைப்பதன் மூலமோ அல்லது அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் மூலமோ அடக்கமுடியும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் ராஜபக்ஷாக்கள் எமக்காகத் தயாரிக்கின்ற தூக்குக்கயிற்றை மிகவும் வலுவாகத் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் எதிர்வரும் காலத்தில் அந்தக் கயிறுக்கு அவர்களே பலியாகப்போகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.