மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுனவே வெல்லும்-சானக வகும்பர

z p01 SLFP
z p01 SLFP

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சியினருக்கு அநீதி இழைக்கபடவில்லை மாறாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த சுதந்திர கட்சியினருக்கு அமைச்சு பதவிகளும், இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே சுதந்திர கட்சியினர் விசுவாசமாக செயற்பட வேண்டும் என சிறு பயிர்செய்கை அபிவிருத்தி அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கராஜா வனத்தை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கம். சுற்றாடற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும். வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பு காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதிகளை பாதுகாக்க பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படுவார்கள். வனப்பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சிக்கு அநீதி இழைக்கப்படவில்லை. பொதுஜன பெரமுரனவின் உறுப்பினர்களுக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பான்மையினருக்கு தற்போதும் அமைச்சு, இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் உண்மை தன்மையினை அறிந்து கருத்துரைக்க வேண்டும்.

இடம் பெறவுள்ள பொது தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் ஒரு சிலர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தனித்து போட்டியிட்டு மக்களாணையை பெற முடியும் என்பதை 2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலின் ஊடாக நிரூபித்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியினர் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாகாண சபை தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அமோக வெற்றிப் பெறும். சிறந்த கொள்கைகள் ஏதும் இல்லாத வகையில் எதிர் தரப்பினர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள் என்றார்.