அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வர அனுப்பப்பட்ட ஆவணங்கள் குறித்து சிங்கப்பூர் சட்டமா அதிபர் ஆராய்வு

1521104793
1521104793

முதலாவது மத்திய வங்கி பிணை முறி மோசடியின் முதல் பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சட்டமா அதிபரால் 3வது முறையாக அனுப்பப்பட்ட ஆவணங்களை சிங்கப்பூரின் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா ஜானகீ ராஜபக்ஷ, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகிய நிரந்தர மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் பாலிந்த ரணசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற திறைசேரி பிணை முறி விநியோகத்தின் போது 600 மில்லியன் ரூபா நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட வழக்கின் 10 பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

தற்போது மலோசியாவில் வசித்து வருவதாக கூறப்படும் 10 வது பிரதிவாதியான பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினரான அஜான் கார்டியா புஞ்சிஹேவாவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அறிவித்தல் வெளிவிவகார அமைச்சு ஊடாக மலோசியாவுக்கான இலங்கை தூதரகத்திடம் கையளிக்குமாறு நீதியரசர் ஆயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர வழக்கின் பிரதிவாதிகளாக பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதானி அர்ஜுன் அலோசியஸ் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஜெப்ரி அலோசியஸ், புஸ்பமித்ர குணவர்த்தன, ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பீ.சமரசிறி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.