தங்கொட்டுவயில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் மாதிரிகள் பரிசோதனை

1617158704 9655547 hirunews
1617158704 9655547 hirunews

தங்கொட்டுவ நகருக்கு அருகில், எண்ணெய் ஆலை ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எண்ணெய் தாங்கி ஊர்திகளிலுள்ள எண்ணெய் மாதிரிகள், அரச இரசாயன பகுப்பாய்வகம், சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில், தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக, விசாரணைகளுக்கு பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இரண்டு எண்ணெய் தாங்கி ஊர்திகளிலும், இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யைக் கொண்டுவந்த மூன்று நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தினால் குறித்த தேங்காய் எண்ணெய் மலேசியாவிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும், தங்கொட்டுவ காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு எண்ணெய் தாங்கியில் தலா 27,500 லீற்றர் வீதம், இரண்டு தாங்கிகளிலும் 55,000 லீற்றர் தேங்காய் எண்ணெய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணெய் தாங்கி ஊர்திகளின் சாரதிகள் இருவரிடமும், அவை தரித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய் ஆலையின் உரிமையாளரிடமும் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

இதன்போது, கடந்த 25 ஆம் திகதி, குறித்த எண்ணெய் தாங்கி ஊர்திகள் அந்த இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக, சாரதிகள் வாக்குமூலமளித்துள்ளனர்.

இதேநேரம், குறித்த தாங்களில், சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் உள்ளதை தாம் அறிந்திருக்கவில்லை என அந்த தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த நபர், அந்த தேங்காய் எண்ணெய்யை நாட்டுக்கு கொண்டுவந்த நிறுவன உரிமையாளருக்கு நெருக்கமானவர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அப்லரொக்ஸின் இரசாயனம் அடங்கியதாக கண்டறியப்பட்டுள்ள 13 தாங்கிகளில், பெரும்பாலானவை குறித்த நிறுவனத்திற்கு சொந்தமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இரண்டு தாங்கிகளும், மறைத்து வைக்கும் நோக்கில் தங்கொட்டுவ பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.