இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்வார் – விஜயகலா மகேஸ்வரன்

download 2 2
download 2 2

தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துக்கூறி தமிழ் மக்களின் உயிர்மூச்சாக திகழ்ந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. யுத்தம் கோரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னியில் தமிழ் மக்கள் பொருளாதார தடைக்குள் சிக்கியிருந்த நேரத்தில் அந்த மக்களின் உரிமைக்குரலாக செயற்பட்டவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையாவார்.

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு ஏற்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன் அந்த இழப்புக்களை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் சென்று நீதி கோரியவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையாவார். யுத்த சூனிய வலயப் பகுதியில் மக்கள் பகடைக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக குரல் எழுப்பியவர்.

வன்னி மீதான பொருளாதார தடையை நீக்கி மக்களுக்கு பொருட்களை அனுப்பி வைக்குமாறு தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையாவார்.

தமிழ் மக்களுக்கெதிரான எத்தகைய அடக்கு முறைக்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக குரலை எழுப்பி இறுதி யுத்தத்தின் போதான இழப்புக்களுக்கு சாட்சியமாக அவரே திகழ்ந்தார்.

கத்தோலிக்க மதகுருவாக இருந்த போதிலும் சகல இன மக்களையும் நேசித்த ஆண்டகை அவர். பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய போதும் அவர் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் விடுவுக்காக பாடுபட்டார்.
அன்னாரின் மறைவு தமிழ்கூறும் பேருலகுக்கு பேரிழப்பாகும்.

1992 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்ட ஆயராக பதவியேற்ற பின்னர் தற்போதைய கொழும்பு மறைமாவட்ட பேராயரும் கர்தினாலுமான மல்கம் றஞ்சித் ஆண்டகை உட்பட தென்பகுதி ஆயர்களை ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கெதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தார். ஆயர் மன்றத்தினர் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலமையை ஏற்படுத்தினார். மடு ஆலய வலயப் பகுதியில் யுத்தம் இடம்பெற்ற போது அப்பகுதியை யுத்த சூனிய வலயமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பிடமும் வலியுறுத்தினார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், சகல தமிழ்த் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் இன்ப, துன்பங்களில் பெரும் பங்காளராக அவர் திகழ்ந்தார்.

அன்னார் மறைந்தாலும் அவர் எப்போதும் ஈழத் தமிழ் பேசும் மக்கள் மனங்களில் வாழ்வார் என்பது திண்ணம் என்று தெரிவித்துள்ளார்.