இலங்கையில் நீடிக்கும் வெப்பமான காலநிலை

ec678b9a60e170ed34b29150932b1c26 XL
ec678b9a60e170ed34b29150932b1c26 XL

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில், சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும் எனத் தெரிவித்துள்ள அவர், எனினும் இது தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிக வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தேவைக்கேற்றளவு நீர் அருந்துதல், முடிந்த வரை நிழல் தரக்கூடிய இடங்களில் இருத்தல் போன்ற விடயங்களை கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வயோதிபர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது