இலங்கை அழகியாக புஷ்பிகா டி சில்வா தெரிவு!

thumb 874
thumb 874

திருமதி இலங்கை அழகி போட்டியின்போது பறிக்கப்பட்ட கிரீடம் , மீண்டும் புஷ்பிகா டி. சில்வாவுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4 ஆம் திகதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, “திருமதி இலங்கை அழகி” ஆக தேர்வு செய்யப்பட்டார்.

எனினும், உலக அழகி போட்டியில் கிரீடத்தை சுவீகரித்த கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.

இதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார்.

இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக உலக அளவில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.

இதற்கிடையே, “திருமதி இலங்கை கிரீடம் புஷ்பிகா டி சில்வாவிற்கு, மீண்டும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய புஷ்பிகா, தனது கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டவர்கள் மீது தனக்கு எந்தவித கோபமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மீது வைராக்கியம் வைக்க போவதில்லை எனவும், நீதி என்றாவது ஒரு நாள் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும் இந்த தருணத்தில், அழகி போட்டிகளில் மாத்திரம் ஏன் அவர்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான் எதிர்வரும் காலங்களில் செயற்பட்டு, விவாகரத்து பெற்ற பெண்களும் இந்த அழகி போட்டியில் பங்கேற்கும் சூழலை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்று புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.