விசாரிக்கப்படாத நௌபர் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியா?-வஜிர அபேவர்தன

IMG 20190322 WA0051
IMG 20190322 WA0051

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்குக் கூட அழைக்கப்படாத நௌபர் மௌலவி திடீரென எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியானார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கேள்வியெழுப்பினார்.

நௌபர் மௌலவியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் எவை என்பது தொடர்பிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திதாரி நௌபர் மௌலவி என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்றை தினம் இரவு நல்லாட்சி அரசாங்கத்தால் நௌபர் மொளலவி கைது செய்யப்பட்டார். இந்த சந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் சஹ்ரானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக அவரிடமிருந்து விலகியமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுக்க விருப்பமின்மையை வெளிப்படுத்தி சஹ்ரானிடமிருந்து விலகிய நௌபர் மௌலவி , பிரதான சூத்திரதாரி என்றால் அவர் நிச்சயம் உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் யாருடைய அழுத்தத்தின் காரணமாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளிலுள்ள நபர்கள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு தொடர்பில் ஆராயுமாறு உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , நௌபர் மௌலவியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் எவை என்பது தொடர்பிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.