நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அஜித் மானப்பெரும!

1 66
1 66

நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனமானது வெற்றிடமாகியுள்ள நிலையிலேயே அந்த இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலின் அடுத்த இடத்தில் உள்ள அஜித் மானப்பெரும இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 47,212 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் அஜித் மானப்பெரும ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் குறித்த ரிட் மனுவை கடந்த 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.