காத்தான்குடி பகுதிக்கு பௌத்த மத தேரர்கள் விஜயம்

IMG 20210408 WA0018
IMG 20210408 WA0018

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு தெற்கிலிருந்து பௌத்த மத தேரர்கள் உட்பட சமய தலைவர்கள் அடங்கிய குழுவொன்று விஜயம் செய்துள்ளனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி யூசுப் முப்தியின் வழிகாட்டலில் இவர்கள் காத்தான்குடிக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

அமரபுர ராமன்ஞய நிக்காய பீடத்தைச் சேர்ந்த தேரர்களும், கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த அருட்தந்தைகளும் மற்றும் உலமாக்களும் இந்த விஜயத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

காத்தான்குடிக்கு வருகை தந்த இவர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டதுடன், கல்லூரியின் மாணவர்கள் றபான் அடித்து மற்றும் பேண்ட் வாத்தியம் இசைத்து இவர்களை வரவேற்றனர்.

குறித்த நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதி நிதிகள் முக்கியஸ்தர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி மத்திய கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்ற வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களையும் சந்தித்ததுடன், பாடசாலை வளாகத்தில் மரக் கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.

அத்தோடு காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட அமரபுர ராமன்ஞய நிக்காய பீடத்தைச் சேர்ந்த தேரர்களுக்கு பாடசாலை அதிபரினால் ஞாபகார்த்த சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் இருந்து வெளிநாட்டில் இடம்பெற்ற கணித போட்டியில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலைக்கும் பௌத்த மத தேரர்கள் அடங்கிய சமய தலைவர்களின் குழு சென்றதுடன் இரண்டு நாட்கள் காத்தான்குடியிலுள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிடுவதுடன் காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மற்றும் அரபுக் கல்லூரிகள் பள்ளிவாசல்கள் என்பவற்றுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.