உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இரு வாரத்திற்குள் வெளியாகின்றது

exam
exam

2020 ஒக்டோபரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதற்கமைய உயர்தர பரீட்சைகள் 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் திகதி நிறைவடைந்தது.

3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இந்நிலையிலேயே உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அதாவது எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் அம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் அதேவேளை , ஜூன் மாதம் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் அம்மாணவர்கள் ஜூலை மாதம் முதல் உயர்தர கல்வியை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சை , புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஒக்டோபர் மாதம் வரையும் , சாதாரண தர பரீட்சைகள் 2020 ஜனவரி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.