கொரோனா நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் – அஜித் ரோஹண

ajith rohana
ajith rohana

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை பேச்சாளரும், பதில்காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ,

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துச்செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் காவல்துறையினருக்கு நாம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருக்கின்றோம்.

கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும். அத்துடன் பொதுமக்களும் அநாவசியமாக வெளியில் திரிவதையும் ஒன்றுகூடுவதையும் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டில் முடக்கநிலையை ஏற்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளே தீர்மானிப்பார்கள். அவர்களது பரிந்துரைகளின் அடிப்படையிலேயே ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.