வன இலாகா பிரச்சனைக்கு வியாழேந்திரனால் தீர்வு!!

IMG 20191215 WA0006
IMG 20191215 WA0006

போரைதீவுப்பற்று வெல்லாவெளிப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிய வன இலாகா தொடர்பான பிரச்சனைக்கு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க வனவளத்துறை திணைக்கள அதிகாரிகள் தற்காலிகமாக எல்லைக் கற்களைப் போடும் பணிகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு நகரின் போரைதீவுப்பற்றின் வெல்லாவெளிப் பிரதேசத்திற்குட்பட்ட விபுலாநந்தபுரம் எனும் வனம்பகுதியானது கிராமவாசிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் வனவளத்துறைத் திணைக்களத்தினர் காடுகளை அடையாளப்படுத்தி மக்களின் குடியிருப்புக்காணிக்குள் எல்லை கற்களைப் போட்டு தங்களது காணிகள் என அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேற்படி வனப் பிரதேசம் வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டால் கிட்டதட்ட 200 பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதே வேளை இந்த வனப்பகுதியை நம்பியே துறவணையடியூற்று, தும்பங்கேணி, திக்கோடை, தளவாய், 38 கிராமம், காளையடிவட்ட,நெல்லிக்காடு போன்ற கிராமவாசிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இத்தகைய செயற்பாட்டை மட்டக்களப்பு வனவளத் திணைக்களம் உடன்நிறுத்தி அந்த வனப்பகுதிக்குரிய அனைத்து உடமைகளையும், அத்தாட்சிகளையும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தாங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் தேவையின் நிமிர்த்தம் குரல் எழுப்பும் போது ஒரு சில அரச அதிகாரிகளால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள்;

குறித்த மக்களுக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும், மக்களைப் பாதிக்கும் எந்த விடயமும் எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனவும், மக்களுக்காகவே அரசும், அரச திணைக்களங்களும் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கெளரவ அமைச்சர் S.m சந்திரசேன அவர்களுடன் தான் தொலைபேசியில் உரையாடி மேற்படி நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து கொண்டு வனத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படும் போது தான் பாராளுமன்றத்தில் எதிர்ப்பினை வெளியிட்டதாகவும், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும் பட்சத்தில் மக்கள் சார்ந்த கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான இறுதி முடிவுகளை வருகின்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் நிச்சயமாக அந்த முடிவுகளை எடுக்கும் போது எமது மக்களுக்கு சாதகமான முடிவுகளே எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைத்து சுதந்திரமும் இந்த அரசின் காலத்தில் நிலவியுள்ளதாகவும் இது தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்

தளவாய் விபுலாநந்தபுரம் வனப்பகுதியில் கிட்டத்தட்ட 531 ஏக்கர் நிலப்பகுதி வனவளத்தினைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மழைக் காலங்களில் வெள்ள நீர் அதிகமாக பரவும் நிலமை தொடர்ந்தால் அயல் கிராமங்களான மண்டூர்,போரைதீவு, பழுகாமம், போன்ற கிராமத்தின் ஆடு, மாடுகள் மேற்படி வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்றது.

மேற்படி விடயத்தினை கண்டித்து திக்கோடை, சுரவணையடிஊத்து, விவேகாநந்தபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் தங்களின் எதிர்ப்பு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவளத்துறை திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக எல்லைக் கற்களைப் போடும் பணிகளை நிறுத்துவதாக தெரிவித்தனர்.