மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் பதவி உயர்வு பரீட்சை எழுதினார்!

images 7
images 7

மன்னாரில் அண்மையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட மின்சார சபை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணிய சக பணியாளர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுய தனிமைப் படுத்தப்பட்டவர்களில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் தனது பதவி உயர்விற்காக நேற்றைய தினம் (23) யாழ்ப்பாணத்தில் பரீட்சைக்காக தோற்ற வேண்டிய நிலை காணப்பட்டது.

எனினும் தென் பகுதியை சேர்ந்த குறித்த நபர் சுய தனிமை படுத்தப்பட்டமையினால் குறித்த பரீட்சையையும், பதவி உயர்வையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் குறித்த நபரின் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

துரித முயற்சிகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் மின்சார சபை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த பணியாளர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள மோட்டக்கடை பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலேயே பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வையில், சுகாதார நடை முறைகளுடன் குறித்த மின்சார சபை பணியாளர் பரீட்சை எழுதி உள்ளார்.