உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் கைது செய்யப்படுவர் – சரத் வீரசேகர

sarath weerasekara
sarath weerasekara

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையின் பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் துரிதமாக கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவியமை , அவர்களுடன் தொடர்புகளைப் பேணியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பாக நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன. அந்த விசாரணை அறிக்கைகளின் எட்டு பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த அறிக்கைகளில் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.