இலங்கையில் உள்ள பிரஜைகளை நாடு திரும்புமாறு சவூதி அறிவிப்பு!

samayam tamil 7
samayam tamil 7

இலங்கை உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளை அங்கிருந்து உடனடியாக நாடு திரும்புமாறு சவூதி அரேபியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய சவூதி அரேபியா மீண்டும் சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகளை ஆரம்பித்தாலும் குறித்த நாடுகளில் இருந்து அடுத்த ஒரு மாதத்திற்கு பயணிகள் தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளே ஏனைய நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இலங்கை உள்ளிட்ட குறித்த ஐந்து ஆசிய நாடுகளிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பயணிக்கும் விமானங்களுக்கு சவூதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது.

அத்துடன் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே யாத்திரைக்கான அனுமதி வழங்கப்படுமென சவூதி அரேபியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.