13 ஆவது திருத்தம் எங்களது அடிப்படை!!

selvam
selvam

13 ஆவது திருத்தச் சட்டம் எங்களது அடிப்படை. அந்த 13 ஆவது திருத்தம் எங்களுக்கு தீர்வல்ல. ஆனாலும் 13 ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து அந்த அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் நேற்று நடாத்தப்பட்டது.

அக் கூட்டத்தின் போது கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை. அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதே நேரம் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறுபட்ட கோரிக்கைகளை இந்த விடயத்தில் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் என்னைப் பொறுத்தமட்டிலே தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதைத் தடுத்து பாதுகாக்க முடியும்.

இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடகளில் இருக்கின்ற மக்கள் அங்கேகுடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நலங்கள் தொடர்ந்தும் களவாடப்படும்.

ஆனாலும் திரும்பி வர விரும்பாதவர்களை வற்புறுத்த முடியாது. அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்ள தமது நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே எங்களுடைய நிலத்தைக் காப்பாற்ற வேண்டுமாக அவர்கள் வரவேண்டும் என்பது மட்டுமல்லாது அதனைக் காப்பாற்றி பாதுகாக்கின்ற வாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதே வேளையில் அண்மையில் ஐனாதிபதி இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ம போது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி 13 ஆவதை நடைமுறைப்படுத்த முடியாது என்றவகையில் அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆக 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுடைய அடிப்படை. போராட்ட இயக்கங்கள் சிந்திய இரத்தத்தின் பின்னணியிலே அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

எனவே அந்தச் சட்டத்தில் இருக்கின்ற அதிகாரங்கள் எங்களுக்கு வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் 13 அவது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வல்ல. அது எங்களது அடிப்படை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.