கர்தினாலை திருப்திப்படுத்தவா ரிஷாட் கைது என கேட்கின்றார் அமீர் அலி

a1a1
a1a1

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை திருப்திப்படுத்துவதற்காகவா நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது என கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணியை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர் அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பின்பற்றாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது அதற்கான காரணம் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கைது இடம் பெற்றுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், குண்டுத்தாக்குதலின் விசாரணை நடவடிக்கைகள் அதிருப்தியளிப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

இவரை திருப்திப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணி தன்மையினை அவர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை அறிந்து கொள்ளும் முக்கியத்துவம் கத்தேலிக்க மக்களுக்கு மாத்திரமல்ல முஸ்லிம் சமூகத்திற்கும் உண்டு. குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் சாதாரண முஸ்லிம் சமூகத்தினர் கூட ஏதாவதொரு வழியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குண்டுத்தாக்குதல்தாரிகளுக்கு நிதியுதவி வழங்கினார் என எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

கொலோசிஷ் நிறுவனத்திற்கு உலோகங்கள் வழங்கியமை தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொலோசிஷ் நிறுவனத்திற்கு உலோகம் வழங்கியமை குறித்து விசாரணைகளை துரிதகரமாக முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த 8 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற வேளை அக்காலக்கட்டத்தில் இராணுவ தளபதி பதவி வகித்த மகேஷ் சேனாநாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட பதியுதீனுடன் தொலைபேசியில் உரையாடியமை குறித்து பல மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன.

இராணுவ தளபதியின் கடமைகளுக்கு ரிஷாட் பதியுதீன் இடையூறு விளைவித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன . இவ்விடயம் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவு குழுவிலும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் அரசியல் மட்டத்தில் குறிப்பிடுவதை போன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என 2019. ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி தற்போதைய காவல்துறைமா அதிபர் சி. டி விக்ரமரட்ன பதில் காவல்துறைமா அதிபராக கடமையாற்றும் போது குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு எழுத்துமூலமாக அறிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பம் தொடர்பில் சாட்சியம் உள்ளதாக கைது செய்வதும், சாட்சியம் இல்லை என்று பிறகு விடுதலை செய்வது வழமையான செயற்படாக காணப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக கடுமையான போக்கினை அரசாங்கம் முன்னெடுக்கிறது என்றார்.