5000 ரூபா வழங்கவேண்டும் என்பதாலேயே போக்குவரத்தை கட்டுப்படுத்தவில்லை-சஜித் அணி

download 2 28
download 2 28

“இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்படவில்லை. போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க வேண்டியேற்படும் என்ற அச்சத்திலேயே அரசு போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் உள்ளது.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவலைப் கட்டுப்படுத்துவதற்குப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது இலங்கையில் குறைந்தளவான பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் பரிசோதனைகளில் நூற்றுக்கு இருபது வீதமானோருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு இலங்கை மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்களை தனிமைப்படுத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளது. நட்சத்திரக் ஹோட்டல்களில் இவ்வாறு இந்தியர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைச் செலவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டியேற்படும் என்ற அச்சத்திலேயே போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமலுள்ளன.

எவ்வாறிருப்பினும் கொரோனாக் கட்டுப்படுத்தலுக்காகப் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளோம்” – என்றார்.