சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட இருந்த ஒரு தொகுதி மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!

IMG 20210502 WA0033 1
IMG 20210502 WA0033 1

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதி இன்றி வீட்டில் வைத்து மாடு வெட்டி இறைச்சிக்கடையில் வைத்து விற்பனை செய்ய முயன்ற நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த இறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரோய் பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில் மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டு இறைச்சியை சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.சி. வின்சன் மற்றும் உயிலங்குளம் பொது சுகாதார பரிசோதகர் ரூபன் றொனி சில்வா ஆகியோர் இணைந்து மேற்படி சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாட்டு இறைச்சியை மீட்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதி இன்றியும் மாடு வெட்ட வேண்டிய உரிய இடத்தில் வெட்டாமலும் வீடு ஒன்றில் வைத்து சட்ட விரோதமான முறையில் வெட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த
மாட்டு இறைச்சியினை பொது சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் பொது சுகாதார பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீட்கப்பட்ட மாட்டு இறைச்சி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. என அவர் மேலும் தெரிவித்தார்.