பிழையான முன்னுதாரணமாகிய வவுனியா சுகாதார அதிகாரிகள்

IMG 7038
IMG 7038

இலங்கை பூராகவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகரொருவர் முகக்கவசத்தை சரியாக அணியாது முகக்கவசம் அணிய வலியுறுத்தும் பதாதையை காட்சிப்படுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள் என விழிப்புணர்வு பதாதைகள் சுகாதார திணைக்களத்தினால் காட்சிப்படுத்தப்பட்டன.

இதன்போது வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பதாதையை காட்சிப்படுத்திய பின்னர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் முக கவசத்தினை தாடையில் விட்டு முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தும் பதாதைக்கு அருகில் நின்று பிழையான முன்னுதாரணத்தினை வழங்கியுள்ளார்.

சாதாரண பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் சட்டத்தின் முன் கொண்டு செல்லும் காவல்துறையினரும் கொவிட் ஒழிப்பு செயலணி மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.