இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது- வேலன் சுவாமிகள்

1621316987998 1621316983175 IMG 7252
1621316987998 1621316983175 IMG 7252

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேசம் நீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழிச்சி இயக்கத்தின் இணைத்தலைவருமான தவத்திரு வேலன் சுவாமிகள், கொத்துக்கொத்தாய் எமது உறவுகள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்தே எமது இனத்தின் விடுதலைக்கான அடுத்த பயணம் ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வை நிறைவு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ,

2009 ஆம் ஆண்டு எமது ஈழ விடுதலை போராட்ட வரலாற்றிலே இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்ககூடிய மிகப்பெரும் மனித படுகொலை மனித பேரவலம் தாயகத்திலே முள்ளிவாய்க்கால் மண்ணிலே நடந்தேறியது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இறுதி யுத்தம் நடைபெற்ற போது பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை பறிகொடுத்த அதாவது இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளவாய்க்கால் மண்ணில் இன்று நிற்கிறோம்.

2009 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைத்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி அவர்களின் ஆத்ம சாந்திக்கு பிராத்திகும் அதே நேரம், எமது பயணமானது அதனுடைய இலக்கை அடையும் வரை தொடரும்.
கொத்துக்கொத்தாய் நாங்கள் இழந்த உறவுகளான பச்சிளம் பலகர்கள் சிறுவர்கள் தாய்மார்கள் என ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட எமது இரத்த உறவுகளை இழந்திருக்கிறோம். அவர்கள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் தமிழன அழிப்பு நடைபெற்றுள்ளது. அதற்கான நீதி விசாரணை வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கிறது. சர்வதேச சமூகம் உண்மையான நியாயமான நீதி விசாரணையை மேற்கொண்டு எமக்கு பரிகார நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை தெரிந்து கொண்டு எமக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை தரவேண்டும் என்பது ஈழத் தமிழர்கள் அனைவரதும் வேண்டுகோள்.

இந்த 12 வருட பூர்த்தியிலே யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நாம் நினைவு கூரக் கூட இந்த தேசத்தில் முடியாமல் உள்ளது. இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை, ஐநா சாசனத்தில் சொல்லப்பட்டடுள்ளது போல இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது. என்ற அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சுதந்தரமாக இந்த நினைவுகூரலை நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இது மனவருத்தம் தருகிறது .

அதன் அடிப்படையில் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தான் எமது இனத்தினுடைய விடுதலைக்கான அடுத்த பயணம் ஆரம்பமாகிறது. இந்த தமிழின அழிப்பு நாளாகிய மே 18 உலகளாவி ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தாயகத்தில் உள்ள உறவுகள், தமிழக உறவுகளும் இணைந்து இதற்கான பயணத்தை மேற்கொள்ளுவோம் என உணர்வுபூர்வமான இத்தினத்தில் நாம் அனைவரும் உறுதியெடுத்துக்கொள்வோம்.