புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையால் கொரோனா ஆபத்து – வர்த்தக சங்கம்

Raththinamani 1
Raththinamani 1

மாவட்டத்தில் உழைக்க வந்த நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பு தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வாறு கவனம் செலுத்துகின்றது என கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தக சங்க தலைவர் இராமையா இரத்தினமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டின் நிலைமைகள் பயங்கரமாக போய்க்கொண்டு இருக்கின்றது. இது சகலரும் அறிந்த விடயமே.வடமாகாணத்தில் ஏற்கனவே பிரச்சினைகள் பலவற்றை தாங்கிய மாவட்டம். குறிப்பிட்ட காலப்பகுதியின் பின் ஓரளவு எமது மக்கள் மீள் எழும்போது கொரோனா எனும் நோய் தாக்கி மீண்டும் பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.

நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. இந்த விடயம் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிடமிருந்து மாவட்டத்தில் தொற்றினால் பாரிய ஆபத்தான நிலை ஏற்படும்.

இந்த பணியாளர்களிற்கு தொற்று ஏற்படும்வரை குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? மாவட்டத்தின் அரசாங்க அதிபர், சுகாதார துறையினர், அதிகாரிகள் அனைவருக்கும் குறித்த விடயத்தில் பொறுப்பு உண்டு என்பதை அறிய வேண்டிய விடயமாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2500க்கு மேற்பட்டவர்கள் தொழில்புரியும் ஆடைத்தொழிற்சாலைகள் உண்டு. குறித்த ஆடைத்தொழிற்சாலைகள் மாவட்டத்தின் கேந்திர பகுதியில் இயங்குகின்றது. அதனைச்சுற்றி கணிசமான பொது மக்கள் வாழ்கின்றனர்.

இந்த ஆடைத்தொழிற்சாலையின் ஊடாக ஒரு தொற்று ஏற்படுமாயின் சுற்றி இருக்கும் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர் என்பதை அரசாங்க அதிபர், சுகாதார துறையினர் யாவரும் அறிவார்கள்.

இந்த மாவட்டத்தில். தொற்று பரவுமாயின் மாவட்டத்தில் எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்பதை நாம் கூறி அறியும் விடயம் அல்ல.

இவ்வாறான சூழலிலும் வேலைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தும் வகையில் நிறுவனம் ஊழியர்களிற்கு அழுத்தம் கொடுக்கின்றது.

போக்குவரத்து தடை போடப்பட்டிருந்த நிலையில் அதிகாலை குறித்த தொழிற்சாலைக்கு ஊழியர்களை பேருந்துகளில் ஏற்றி சென்றதை நான் பார்த்துள்ளேன். இவ்வாறான பயணங்களால் பாதிப்பு இல்லையா என்பது தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறான சூழலில் முடிவு எடுக்க வேண்டியவர்களாக சுகாதார பிரிவினரும், மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டத்தில் அக்கறைகொள்ளும் புத்தி ஜீவிகளும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.